Monday, March 5, 2012

பயம்

ராமு ஒன்பது வயது முடிந்து பத்து வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் சிறுவன். ராமுவும் அவனது குடும்பமும் அந்த ஊருக்கு புதிதாக குடிவந்தவர்கள். ராமுவிற்கு இருள் என்றாலே பயம். அதிலும் பேய், பூதம், பிசாசு முக்கியமாக ரத்தக்காட்டேரி என்றால் பயத்தில் அழுது ஆர்பாட்டம் செய்துவிடுவான். அந்த ஊரில் அவனுக்கு விமன் என்று ஒரு புதிய நண்பன் கிடைத்தான். இருவரும் எப்பொழுதும் சேர்ந்தே இருந்தனர். காலையில் பள்ளிக்குப்போவது, மாலையில் விளையாடுவது, ஊர் சுற்றுவது என்று ஒன்றாகவே இருந்தனர். ராமு எப்பொழுதும் விமனின் வீட்டிலேயே இருந்தான். சில நேரங்களில் அவன் அங்கு விளையாடிவிட்டு அப்படியே தூங்கிவிடுவதுமுண்டு. அந்த நேரத்தில் ராமுவின் அப்பா அங்கு வந்து அவனை வீட்டிற்கு தூக்கிக்கொண்டு செல்வார்.

அந்த ஊரில் ஒரு வினோதமான நம்பிக்கை இருந்தது. வருடத்தில் ஒரு நாள் மட்டும் அந்த ஊரில் சூரிய ஒளியே இருக்காது. அன்று மட்டும் மாலை நான்கு மணிக்கெல்லாம் இருட்டிவிடும். அன்று மட்டும் யாரும் மூன்று மணிக்குமேல் யாரும் வெளியே வரமாட்டார்கள். அன்று வெளியே வந்தால் ரத்தக்காட்டேரிகள் தங்களை கொன்று ரத்தத்தை உரிஞ்சிவிடும் என பயந்தனர். அந்த நம்பிக்கை இன்றும் தொடர்ந்துகொண்டு இருந்தது. மீறி வெளியே சென்றவர்களின் பிணம் கூட மிஞ்சாமல் காணாமல் போயினர்.

ராமுவிற்கு இது தெரியுமாதலல் மிகவும் பயந்தான். வழக்கம்போல அந்த நாளும் வந்தது. அன்றுதான் ராமுவிற்கு பிறந்தநாளும் வந்தது. அன்று பிறந்தநாள் என்பதால் ராமு மிகவும் சந்தோஷமாக இருந்தான். புது உடை மாற்றிகொண்டு தனது நண்பர்களை பார்க்க சென்றான். விமனின் வீட்டிற்கு சென்று அவனை அன்று தன் வீட்டிற்கு அழைத்தான். ஆனால் அன்று மட்டும் வேண்டாம் என்று விமனின் அம்மா மறுத்தார். ராமுவும் விமனும் சிறிது நேரம் பிடிவாதம் பிடிக்கவே விமனின் அம்மா, "சரி, வெளிய எங்கயும் சுத்தாம நேரா உங்க வீட்டுக்கு மட்டும் போறதா இருந்தா சரி" என்று அனுப்பிவைத்தாள்.


நடக்கப்போகும் விபரீதம் அறியாமல் சிறுவர்கள் இருவரும் அங்குள்ள மைதானத்தில் விளையாடச்சென்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அங்கு இருள் படரத்தொடங்கியது. இருள் வளர வளர சிறுவர்களுக்கு பயம் வரத்தொடங்கியது. ஆந்தையின் ஓலமும், ஓநாய்களின் ஊளைச்சத்தமும் ஓங்கியது. சிறுவர்கள் இருவரும் பயத்தில் ஓடத்தொடங்கினர். தூரத்தில் சலங்கைச்சத்தமும், பேய்ச்சிரிப்பும் அவர்களின் பயத்தை அதிகரிக்க அவர்களின் ஓட்டமும் வேகமெடுத்தது.

எப்படியோ இருவரும் ராமுவின் வீட்டை அடைந்து நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். வழக்கத்திற்குமாறாக அன்று வீட்டின் எல்லா கதவுகளும் திறந்து இருந்தது. ராமு விமனை இழுத்துக்கொண்டு சமையலறைக்கு ஓடினான். ராமு, "அம்மா, தண்ணி கொடுமா!", என்றவன் அங்கு கண்ட காட்சியை கண்டு பயந்து நடுங்கினான். இருவரும் அங்கிருந்து மாடிக்கு ஓடினர். அவன் அம்மாவிற்கு பதிலாக ஒரு ரத்தக்காட்டேரி அங்கு இருந்தது. நுழைந்த ஒவ்வொரு அறையிலும் ரத்தக்காட்டேரி இருந்தது. இருவரும், வீட்டிற்குள் ரத்தக்காட்டேரிகள் வந்துவிட்டது இனி தப்ப முடியாது என எண்ணி பயந்தபடியே ஒரு அறையினுள் ஓடினர்.

இருவரும் அங்கிருந்த அறையில் ஆளுக்கு ஒரு மூலையில் பயந்தபடியே நின்றிருந்தனர். அப்போது அந்த அறையில் ரத்தக்காட்டேரிகள் நுழைந்தன.. இப்போது ராமுவிற்கு வினோதமாகவும், விமனுக்கு பயம் அதிகரித்துமிருந்தது. அங்கிருந்த ரத்தக்காட்டேரி ஒன்று, "ராமு, நாமும் ரத்தக்காட்டேரிதான். ஆனா இந்த நாளைத்தவிர வேற எப்பவும் சூரிய ஒளியில் நாம கருக மாட்டோம். வருஷத்து ஒரு தடவை மட்டும் நமக்கு முழு பலமும் வரும். மிச்ச நாளில் நாமும் மனுஷங்க மாதிரிதான் இருப்போம். முதல் முதல்ல நமக்கு பத்தாவது பிறந்தநாளன்னிகு அந்த சக்தி கிடைக்கும். இன்னிக்குதான் உன் முதல் உருமாற்றம். உன்னோட வேட்டையை ஆரம்பிச்சிடு", என்றாள்.

ராமுவின் மனித உடல் மறைந்து ஒரு சிறிய ரத்தக்காட்டேரியாக உருமாறிக்கொண்டிருந்தான். அதுதான் அவனது ஆச்சரியத்திற்கு காரணம். இப்பொழுது அவன் முழு ரத்தக்காட்டேரியாக மாறியிருந்தான். அவனால் மனிதவாடையை உனரமுடிந்தது. அவனுக்கு ரத்த தாகமும் கூடியது. ராமுவும், அவனைச்சுற்றியிருந்த ரத்தக்காட்டேரிகளும் சிரித்துக்கொண்டே விமனை நோக்கி நகரத்தொடங்கின.....

2 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!

    ReplyDelete
  2. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி..

    ReplyDelete